2012 திரும்பிப்பார்க்கின்றேன்


2012ல் இந்தப் பதிவுடன் வெறும் ஐந்தே ஐந்து பதிவு எழுதிய பெருமை என்னையே சாரும். 2011 டிசம்பரில் இருந்து மேற்கு வேல்ஸில் வசித்தபடியால் வேலைப்பளு காரணமாக பெரிதாக எழுதவில்லை. வாழ்க்கையில் சில படிப்பினைகள் பல அனுபவங்கள் எல்லாம் கற்றபெற்ற இடமாக வேல்ஸ் என்னை மாத்தியது. அன்பான மனிதர்கள் அமைதியான கடல் குட்டிக்குட்டி மலைகள் நிறைந்த அழகான நகரம் வேல்ஸ்.


2012ல் மறக்கமுடியாத பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் இடம்பெற்றாலும் குறிப்பிடுச் சொல்லும்படியான வரலாற்று நிகழ்வு லண்டன் 2012 ஒலிம்பிக்கில் மரதன் ஓட்டமும் வேக நடையும் நேரடியாக பல்லின மக்களுடன் பார்த்து ரசித்ததுதான். ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு டிக்கெட் கிடைக்காதபடியால் போகமுடியவில்லை, ஆனாலும் ஒலிம்பிக் ஆரம்பமாவதற்க்கு முன்னர் பெரியப்பு கானாபிரபா, மாயா இருவருடனும் ஒலிம்பிக் கிராமத்தை சுத்திபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.(லண்டனில் எம்மைச் சந்தித்த சரித்திர நிகழ்வை ஏனோ பெரியப்பு கானா இன்னும் எழுதவில்லை).  


என் வாழ்க்கையின் நீண்ட நாள் ஆசை ஒன்று இந்தவருடம் நிறைவேறியது, கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்க டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் நேரடியாக பார்த்தேன். ஒரு புனித தலத்திற்க்கு சென்ற பீலிங் எனக்கு ஏற்பட்டது.


சென்ற ஆண்டில் நான் ரசித்த சில விடயங்கள்

கங்கம் ஸ்டைல்
தென்கொரிய பாடகர் Psy யினால் கடந்த ஜூலையில் பரபரப்பரப்பாக பாடப்பட்டு யூடூயூப்பில் பல மில்லியன் ஹிட் அடித்த பாடல். தென்கொரியர்களின் மேற்கத்திய மோகத்தை நக்கலடித்த பாடல். இதனை இன்னும் பிரபலமாக்கியது மேற்கிந்திய வீரர் கிறீஸ் கெய்ல். வழக்கம் போல இதனையும் ஹாரீஸ் ஜெயராஜ் விட்டுவைக்கவில்லை, துப்பாக்கி கூகுள் கூகுள் பாடலில் கொஞ்சம் சுட்டுவைத்திருக்கின்றார்.

Fifty Shades of Grey
E.L.James இனால் 2011ல் எழுதப்பட்டு 2012ல் சக்கைபோடு போட்ட நாவல், பெரியதொழிலதிபர் கிறே மீது பல்கலைக்கழக மாணவி அனஸ்தீசியா ஸ்டீலுக்கு ஏற்படும் காதல் மிகவும் அழகாக எழுதியிருக்கின்றார். காதலும் அதனூடு சேர்ந்திருக்கும் காமத்தையும் ஆபாசமின்றி எழுதியிருப்பதனாலோ எனவோ பெரும்பாலான பெண்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றது. பிரித்தானியாவில் ரயில்கள் பஸ்கள் என சகல போக்குவரத்துகளிலும் பிரயாணிக்கும் பெரும்பாலன பெண்களின் கைகளில் இந்தப் புத்தகம் சிலகாலம் தஞ்சமடைந்திருந்ததை அவதானித்தேன். 

முகனூலர் (பொது)
மைந்தன் சிவா 
மைந்தனின் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் பெரும்பாலும் அரசியல், விளையாட்டு, மொக்கை, சினிமா என பலதையும் பேசும் சில நேரங்களில் காரசாரமான விவாதங்களும் நடைபெறும். பெண்கள் பற்றிய கருத்துக்களை எந்தவிதமான பயமின்றி தெரிவிக்கும் மர்மம் இன்னும் பிடிபடவில்லை.

முகனூலர் (காதல்)
தங்கமயில் புருஷோத்தமன்
காதலாகிக் கசிந்து இவர் இடும் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் கெளதம் வாசுதேவ மேனன் படங்கள் போலவே இருக்கும். காதல் அனுபவம் இல்லாமல் இவரால் இப்படி எழுதமுடியாது என்பது வெளிப்படை உண்மை, ஆனாலும் சிங்கம் இன்னும் சிங்கிளாக இருப்பதாகவே அடிக்கடி அறிக்கை விடுகின்றார்.

கீச்சர்
திருக்குமார்
திருக்குமார் அண்ணாவின் கீச்சுக்களில் பெரும்பாலும் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். இடையிடையே ராஜா ரகுமான் என சீரியசாக கீச்சினாலும் அண்மைக்காலமாக அவரின் கீச்சுகள் குறைந்துவிட்டன, அவரின் இந்தக் கீச்சின் பின்னர் நிலைமை மாறியிருக்கலாம்
Thirukkumar ‏@Thirukkumar
நேற்று எங்கள் திருமண நாள் இன்று தான் ஞாபகம் வந்தது #பூகம்பம்

பெரும்பாலும் பிடித்தமான வலைகளையும் காத்திரமான வலைகளையும் வாசித்தாலும் அவற்றிற்கு பின்னூட்டம் இடுவது என்பது மிகவும் குறைவு, பேஸ்புக்கில் அவர்கள் அதனை பகிர்ந்திருந்தால் ஒரு லைக்குடன் விட்டுவிடுவேன். அதனால் இந்தம்முறை எனக்குப் பிடித்தவலை என எதையும் குறிப்பிடமுடியாமல் உள்ளது. இதேவேளை படித்த பதிவு என்றால் கங்கோன் தனது லப்டொப் காணமல் போனது பற்றி தனது மொபைலில் இருந்து இட்ட ஆங்கிலப் பதிவு.

Being careless doesn’t help

படம்  : நண்பன்

பாடல் : அஸ்கு லஸ்கா : படம் :  நண்பன்

சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி(பீட்ஷா)

சிறந்த நடிகை : சமந்தா ( நீதானே என் பொன்வசந்தம்)

சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (நண்பன்)

சிறந்த இயக்குனர் : ஏ,ஆர், முருகதாஸ்(துப்பாக்கி)

சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி(நண்பன்)

தொலைக்காட்சித் தொகுப்பாளர்  : இந்த வருடம்எவரும் பெரிதாக என்னைக் கவரவில்லை, கோபிநாத் அழகாகப் பேசினாலும் எதிரில் இருப்பவர்களின் பெயரைக்கூட ஒருநாளும் கேட்பதில்லை மஞ்சள் சட்டை போட்டவர் சொல்லுங்கள், கட்டம் போட்ட சட்டை போட்டவருக்கு இன்றைய பரிசு என்பார், இது என்ன நாகரீகமோ கோபிக்குத் தான் வெளிச்சம். ஹாலிவூட் கிங் தொகுத்துவழங்கும் வெங்கட் பிரபு ஓரளவு நல்லாச் செய்தாலும் தங்கள் குடும்ப விடயங்களையும் தலை பற்றியும் ரொம்ப ஓவராகப் பேசுகின்றார். 

சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம் 
வேறை யாருமல்ல வழக்கு பாயுதே புகழ் பாடகிதான்.

வடபோச்சே
மாயன் கலண்டரின் படி உலகம் அழியப்போவதாக நினைத்த சிலரை ஏமாத்திய மாயன் கலண்டர்.

அனைத்து நட்புகளுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2013 அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தை வழங்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கின்றேன். 

நீதானே எந்தன் பொன்வசந்தம் உங்களின் காதல் கதை


இளையராஜா இசை கெளதம் இயக்கம் அழகுப் பதுமை சமந்தா என எதிர்பார்ப்பை எகிறவைத்த நீதானே எந்தன் பொன்வசந்தம் நீண்ட நாட்களின் பின்னர் முதல்நாள் இல்லை முதல்நாளுக்கு முதல்நாள் முதல்காட்சி படம் பார்க்கமுடிந்தது. தீடீரென வெளியிட்டபடியாலோ என்னவோ பெரிதாககூட்டம் இல்லை ஆனால் சில பெண்களை தியேட்டரில் பார்க்ககூடியதாக இருந்தது.

கதை
பாடசாலை நாட்களில் ஏற்படும் பப்பிக் காதல் கதை. அந்தந்த வயதில் காதலர்களுக்கிடையே ஏற்படும் ஈகோச் சண்டைகள். விட்டுக்கொடுப்புகள் பிடிவாதங்கள் இறுதியில் என்ன நடக்கின்றது என்பதுதான் கதை.

திரைக்கதை
முதல் பாதியில் பாடசாலை கல்லூரிக் காதல்களை வேகமாகவும் யதார்த்தமாகவும் அமைத்த கெளதம் இரண்டாம் பாதியை கிளைமாக்ஸ் வரை இழுவையாக அமைத்திருக்கின்றார். அதிலும் கிளைமாக்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கெளதமின் படமா என்ற சந்தேகம் ஏற்படும். அடுத்தது இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை படத்தின் பலவீனங்களில் ஒன்று. 

வசனம்
படத்தின் மிகப்பெரிய பலமே இயல்பான வசனங்கள் தான் வழக்கமான கெளதம் படங்களில் வரும் ஆங்கிலத் திணிப்பு அவ்வளவாக இல்லை. சந்தானத்தின் நகைச்சுவையான சில பஞ்ச் வசனங்கள் பேஸ்புக் ஸ்டேடசுக்கு பொருத்தமானவை. 

இயக்கம்
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற காதல் ஹிட் அடித்த கெளதம் அலிஸ்டர் குக் போல அசரமால் இதிலும் அதிரடியாக சதமடித்திருக்கின்றார். இதற்கான முழுக்காரணம் இந்தக் கதையின் ஏதாவது ஒரு காட்சியாவது உங்கள் வாழ்க்கையில்(நீங்கள் காதலித்தவர், காதலித்துக்கொண்டிருப்பவர் என்றால்) நடந்திருக்கும். பல இடங்களில் திரைக்கதையுடன் உங்களை ஒன்ற வைத்திருப்பது கெளதத்தின் வெற்றியே. 

வருண்
வருண் என்ற பாத்திரத்தில் வரும் ஜீவாவை நீங்கள் எப்படியும் உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பீர்கள், உங்கள் நண்பனாகவோ உறவினனாகவோ ஏன் சில வேளை நீங்களாகவோ கூட இருக்கலாம். ஒரு சாதாரண வாலிபனாக படம் முழுவதும் ஜீவா ஆக்கிரமித்திருக்கின்றார். கல்லூரியில் நீண்ட நாட்களின் பின்னர் சமந்தாவை கண்டதும் மேடையில் ஜீவா பாடும் பாடலில் நண்பன் குறும்பு கொப்பளிக்கின்றது. சந்தானத்துடன் அடிக்கும் லூட்டிகளில் தியேட்டரே அதிருகின்றது. சமந்தாவுக்கு கொடுக்கும் முத்தகாட்சிகளில் மட்டுமே ஜீவாவிடம் கெமிஸ்ரி மிஸ்சிங்.(புன்னகை மன்னன் படத்தை நாலு தடவை பார்த்திருந்தால் கெமிஸ்ரி பிசிக்ஸ் எல்லாம் தானாகவே வந்திருக்கும்).  

நித்யா
நினைவெல்லாம் நித்யா, நினைவெல்லாம் சமந்தா என படம் பார்த்துக்க்கொண்டிருக்கும் போதே ட்விட்டர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட முனைந்தேன் ஆனால் அது சில பல சொசெசூ ஆகிவிடும் என்றதாலே கைவிட்டுவிட்டேன். அழகாக இருக்கின்றார், அழகாக சிரிக்கின்றார் அழகாக நடிக்கின்றார் அழகாக அழுகின்றார்(சமந்தாவை அழவைத்த கெளதமுக்கு பக்கத்தில் இருந்த ஜது கண்டனம் தெரிவித்தான்). விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசியை விட எனக்கு நீஎபொவ நித்யாவை பிடித்திருக்கின்றது. ஈகோ பிடித்த அழுத்தமான கொஞ்சம் சுயநலமான இக்காலப் பெண்களை சமந்தா பிரதிபலிக்கின்றார். 

சந்தானம்
படத்தின் இன்னொரு பலம் சந்தானம். ஜீவாவின் நண்பனாக இவர் அடிக்கும் லூட்டிகள் கலக்கல். லாரிக்கு கீழ போனவனைக் கூட காப்பாத்தலாம் ஆனால் லவ்விலை விழுந்தவனை காப்பாத்தவே முடியாது. சல்வார் மங்கிப்போனதும் ஜீன்ஸ் பேண்டிடம் வருவியள் கரண்டைக்கூட சொல்லிப்போட்டுத்தான் கட் பண்ணுவான் ஆனால் காதலை என இவர் அடிக்கும் பஞ்ச் வசனங்கள் அக்மார்க் சந்தானம் குறும்பு. அந்தக் குண்டுப் பெண்ணின் மேல் இவருக்கு வரும் காதலும் அதன் பின்னர் ஒரு இடத்தில் இவர் அடிக்கும் ஒரு கொமெண்ட் 18+ ஆக இருந்தாலும் தியேட்டரில் பலருக்கு புரியவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கவுண்டர்மணி பாணியில் இருந்து சந்தானம் விடுபடுகின்றார்.

ஆண்டனியின் எடிட்டிங் மட்டும் இல்லையென்றால் படம் பப்படமாகி இருக்கும். எங்கே எங்கே தேவையோ அங்கை எல்லாம் அழகாவும் அளவாகவும் கத்தரி வைத்திருக்கின்றார். எம் எஸ் பிரபு ஓம்பிர்காஷின் ஒளிப்பதிவில் இராமேஸ்வரம் காட்சிகள் இயற்கை. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். கால ஓட்டத்தினை மொபைல் போனை வைத்து வேறுபடுத்தியிருப்பது அசல் கெளதம் வாசுதேவ் மேனன் டச். 

ஒரு அழகான காதல்கதையை இயல்பாக சொன்ன கெளதமுக்கும் அந்தக் கதாபாத்திரங்களில் வாழ்ந்த ஜீவா சமந்தாவுக்கும் பூங்கொத்து அல்ல பூந்தோட்டத்தையே பரிசளித்திருக்கலாம்.

ஓஓஓ மிகவும் ரசித்த ஒரு விடயத்தை மறந்துவிட்டேன் நினைவெல்லாம் நித்யா படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடலை கெளதம் பாடும் போது மட்டுமே இசை இசைஞானி இளையராஜா மனதை வருடுகின்றார். 


அதிரடி ட்விட்டர்ஸ்


கமல் : நிறுத்தனும்… நிறுத்தனும்… எல்லாத்தையும் நிறுத்தனும்.

சூர்யா : எதை சார் நிறுத்தனும்? எங்க கொண்டு போய் நிறுத்தனும்?

கமல் : நான் காரைச் சொல்லல. ட்ரைலரைச் சொன்னேன். விஸ்வரூபம் ட்ரைலர் வெளியாகி 100 நாள் வெற்றிவிழா என்று நக்கலடிக்கிறத நிறுத்தனும். படத்துக்கு பெயர் வைச்சவுடனே இது அந்தப் படத்தின் காப்பி, இது இந்தப் படத்தின் காப்பி என்று ஆராய்ச்சி செய்றத நிறுத்தனும்.

விக்ரம் : எஸ், யூ ஆர் ரைட் சார். நான் கஸ்டப்பட்டு நடிச்ச தெய்வத்திருமகளை, 'அங்கிள் சாம்', 'ஆண்டி மாம்' என்று கத விடுறாங்க.

விஜய் : ..ண்ணா….! யார்ண்ணா இத எல்லாம் செய்றது?

சூர்யா: அடப்பாவி! நீ நெட் பக்கமே வாறதில்லையா?

விஜய்: எனக்குத் தெரிஞ்சது, மீன் பிடிக்கிற நெட்தான் சரவணா!

சிம்பு : அண்ணா! மீன், நெட் எல்லாம் தடை செஞ்சாச்சுண்ணா.

சூர்யா : இன்டெர்னெட் கனெக்சனும், பிசியும் இருந்தாப் போதும், ட்விட்டர், பேஸ்புக் பப்ளாக் என்று நம்மைக் கலாய்க்க ஆரம்பிக்கிறாங்க. இப்ப அவங்களாலதான் நமக்கு பெரிய தலையிடி.

விஜய் : ஓ….! அவங்களா! யூ மீன் ட்விட்டர்ஸ், புளொக்கர்ஸ். ஐ நோ! ஐ நோ! அவங்க என்னோட எல்லாப் படத்தையும் கிழிச்சுத் தொங்கவிட்டுத் தோரணம் கட்றாங்களே!. அதில ஒருத்தன் படத்தோட வசனத்தை வரிக்கு வரி மாறாமல் எழுதுறான்.

அஜித் : நான் பேஸ்மாட்டேன்!

சிம்பு : வாங்கோ நடைராஜா.

அஜித் : நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்சாலும். 'அஜித் நடையைக் கொஞ்சம் குறைக்கலாம்' என்று கடைசி வரியில பஞ்ச் அடிப்பாங்க. ஷாலீனி வாசிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.

கமல் : இவங்கள நிறுத்த நாம என்ன செய்யலாம். அத சொல்லுங்க?

சிம்பு: ஒவ்வொருவருக்கும் கையில கவர் கொடுத்துடுவோமா?

விஜய் : ஒருத்தனா, ரெண்டு பேரா கவர் கொடுக்கிறதுக்கு. அவங்கதான் லட்சக்கணக்கில் இருக்காங்களே! எப்படிப்பா கவர் பண்றது?

விஜய்காந்த் : அங்…! பேஸ்புக்கில் 4 கோடியே 20 லட்சத்து 20 ஆயிரத்து 38, ட்விட்டரில் 2 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரத்து 112, ப்ளாக்கில் 3 லட்சத்து முன்னூற்று முப்பது. இதில் இந்தியத் தமிழர்கள்…….

தனுஷ் : தலைவா! போதும் தலைவா! நீங்கள் இன்னும் ரமணா எஃபெக்ட்டிலதான் இருக்கீங்க. முருகதாஸ் சார் இப்போ துப்பாக்கி தூக்கப் போய்ட்டார்.

விஜய் : யா..! யா..! "சாதாரணத் துப்பாக்கியால, ஒருவனை ஒரு தடவைதான் சுடலாம். ஆனால், என் துப்பாக்கியால, தியேட்டர்ல இருக்கிற எல்லாரையும் அட் எ டைம் சுட்றலாம்" என்று எஸ்எம்எஸ் அனுப்புறாங்க.

சூர்யா : இத எல்லாம் நிறுத்த, நாமளும் சமூக வலைத்தளங்கள்ல இணையிறதுதான் ஒரே வழி.

ஜீவா : மச்சி! நான் எப்பவோ தொடங்கிட்டேன் மச்சி. ஆனால இவங்கள் ஒருத்தனும் என்னையக் கலாய்க்கிறதே இல்ல.

ஆர்யா : அவங்க எப்பிடி உன்னக் கலாய்ப்பாங்க? 'ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி! என்று நீயே அவங்களோட மிங்கில் ஆயிடுறாய்.

அஜித்: ட்விட்டரில் இணையிறதுக்கு என்ன செய்யனும் ?

ஜீவா : அஜித் சார்! உங்களுக்குத் தமிழ் தெரியுமா?அஜித் : ஓ! நல்லாத் தெரியுமே!

ஜீவா : அப்போ, நீங்கள் இங்லீஷ், ஹிந்திலதான் ட்விட்ட வேண்டூம்.

அஜித் : ஏன்?

ஜீவா : அப்படீன்னாத்தான் நீங்க அண்டார்ட்டிகாவில இருக்கிற அல்பி, ஆபிரிக்காவில இருக்கிற குக், மொசப்பதோமியாவில இருக்கிற கெயில்
இவங்களோடவெல்லாம் ஃபொலோயேர்ஸ் என்று பேசிக் கொள்ளலாம்.

விஜய் : ராஜதந்திரங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறே நீ.

கமல்: இதை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு வீட்டில எத்தன ஜன்னல்கள் இருந்தாலும், வாசல் கதவுதான் முக்கியம். அதப்போலதான் எத்தன மொழிகள் தெரிஞ்சிருந்தாலும் தாய் மொழிய மறக்கக்கூடாது.

அஜித் : சூப்பர் பஞ்ச் சார்.

விக்ரம் : அதைவிட நமக்கு ஜிங்சாக் அடிக்கும் 4 பேர நாம கூடவே வச்சிருக்கவேணும்.

ஜீவா : அவங்க காவேரித் தண்ணி குடிச்சிருந்தால், இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கமல் : மீன் டைம், இப்போ ஹாட் என்ன விசயம் என்று பார்த்து அதப் பத்தியும் ஒருவரி சொல்லிடனும், இடையிடையே பெண்ணடிமை, ஈழம், டொசோ, தமிழன், கிரிக்கெட், இறையாண்மை எல்லாம் சேர்த்துக்கணும்.

சிம்பு : யாரையாவது போகிற போக்கில் வம்புக்கு இழுத்தா இன்னும் ஸ்பெசலா இருக்கும்.

ஜீவா : ஆளைவிடு சாமி. கேஸ் போட்டுடுங்கள்.

அஜித் : என்னய நடைராஜா, வோக்கிங் கிங், கோட்டு கழட்டாதவன் என்று எவன் இனிமேல் சொன்னாலும், அவன் மேல் சட்டம் பாயும்.

விஜய்: என்னை எப்படி நக்கலடிச்சாலும் தாங்குவேன் ஆனா எனக்கு நடிக்கத் தெரியாது என்று கலாய்க்கிறத்தான் தாங்க முடியல. அவங்க மேல் சகல இபிகோவிலும் வழக்கு போடனும்.

சூர்யா : அடப்பாவி! எப்படிடா இப்படி? வெட்கமே இல்லாம கதைக்கிறாய், நீ நடிச்ச சாரி வந்துபோன சுறாவை ஜட்ஜ் பார்த்தால், அவரே தற்கொலை செய்திடுவார்.

விஜய் : அவ்வ்வ்…! சொந்தச் செலவில் சூனியம் வச்சிட்டனோ?

கமல் : கலைஞர் ஆட்சி என்றால், ஃபேஸ்புக் தலைவருக்கு ஒரு லைக் என பாராட்டுவிழா நடத்தி நம்ம பிரச்சனையச் சொல்லலாம்.

விஜய் : சார்! அப்பாவை அனுப்பி அம்மாவிடம் கோரிக்கை வைப்போமா?

விக்ரம் : யூ மீன் சோபா ஆண்டி?

விஜய் : இல்லங்ண்ணா முதல்வர் அம்மா.

விக்ரம் : அவங்ககிட்ட என்னால குனிஞ்சு நிமிர தொப்பை விடாது. நான் வரல.
இவர்கள் பேஎசிக்கொண்டிருந்த போது, அங்கே திடீரென ஒரு குரல் கேட்கிறது.

குரல்: ட்விட்டர் எனக்கு சுவெட்டர். ஃபேஸ்புக் என் பாஸ்புக். வலை என்னோட தலை.

விஜய் டீ.ராஜேந்தர் உள்ளே நுழைய எல்லோரும் ஜேர்க் ஆகிறார்கள்.
டீ ஆர் : நண்பர்களே! யூட்யூப்பிலிருந்து வால்ட்யூப் வரை என்னை கிண்டலடிக்கிறார்கள். இத எல்லாம் நான் பொறுத்துக் கொண்டது போல நீங்களும் பொறுக்க வேண்டும். ஏய் டண்டனக்கா டணக்கு டக்கா.


அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும் பிரபலங்களின் மீதான நக்கல் நையாண்டிகள் அதிகரித்திருப்பதால் நம்ம சில கதாநாயகர்கள் இதனை எப்படி எதிர்கொள்வது என தமக்குள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டவை.

லோஷன் 50



இன்று தன்னுடைய 35 ஆவது பிறந்தநாளை பத்தாம் முறையாக கொண்டாடும் இலங்கையின் மூத்த வானொலியாளர், வலைப்பதிவர், கிரிக்கெட்டர், ட்விட்டர் லோஷன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

1. இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் என்பது இவரின் முழுப்பெயர் எந்த மொழியிலாவது ஒரே தடவையில் எழுதமுடியாது, அப்படி எழுதிக்காட்டுபவர்களுக்கு லோஷன் ஒரு பிட்ஷா அன்பளிப்புச் செய்வார்.

2, சிறுவயதில் குட்டிப் பிரபுபோல நல்ல சதைப்பிடிப்பான கன்னத்துடன் இருந்தபடியால் பல ஆண்டிமாரின் கிள்ளல்களுக்கு உள்ளானது இவரின் அப்பிள் கன்னம்.

3. கணித பாடம் படித்தாலும் அன்று முதல் தமிழ் மேல் தீராத காதல் இவருக்கு (தமிழ் கூடப்படித்த பெட்டை என நினைக்கவேண்டாம்)

4. சின்ன வயதில் இருந்தே சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தில் சில வருடம் சங்கீதம் கற்றார் பிடித்த இராகம் கீரவாணி.

5. ஆக்சன் படங்களை விரும்பிப்பார்ப்பார் விஜயகாந்த் படங்கள் என்றால் அலாதி ப்ரியம் அசப்பில் தான் வெள்ளை விஜயகாந்த் என நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்படுவார்

6. குஷ்பு நமீதா ஹன்சிகா மொத்துவாணி போன்ற குண்டு நடிகைகளை மிகவும் பிடிக்கும்

7. நயந்தாராவால் பெருமை அடைந்தவர்களில் இவரும் ஒருவர் பின்னே நயந்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா என ஒரு பதிவு போட்டு ஹிட் அடித்தவராச்சே.

8. கிரிக்கெட்டில் இவர் எந்த அணியை ஆதரிக்கின்றாரோ அந்த அணி மண்ணைக் கவ்வும் இதனால் தான் என்னவோ பல சூதாட்ட முகவர்கள் இவரின் முகவரி தேடி அலைந்தார்கள்.

9.கடந்த வருடம் பெந்தோட்டை பீச்சில் நண்பர்களுடன் நீச்சலடிக்கப் போய் பக்கத்து வீட்டில் வாளி வாங்கி அள்ளிக்குளித்த பெருமை இவரையே சாரும்

10. வெள்ளவத்தை மனிங் பிளேஸ் 141 பஸ் நிலையம் மிகவும் பிடித்த இடம்.

11. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. ஐஸ்வோர்ட்டர், ஐஸ்கிரீம், பிட்ஷா என எல்லாம் சாப்பிடுவார்!

12. சாப்பாட்டுப் பிரியன் பறக்கிறதிலை விமானமும் மிதக்கின்றதிலை கப்பலையும் தவிர அனைத்தையும் ரசித்து உண்பார். பிடித்த உணவு பீட்ஷா ஆனால் வாங்கி உண்டதை விட நண்பர்களுடன் பெட் கட்டி வாங்கிக்கொடுத்ததே அதிகம்.

13. பிடித்த உணவகம் பம்பலப்பட்டி சைனீஸ் ட்ராகன். ஹாட் அண்ட் சவர் சிக்கன் சூப் மிகவும் பிடிக்கும்.

14. கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டியை ரசிக்க மும்பைக்கு பறந்தவர் ஆனால் போட்டியின் முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்திருந்த இன்னொன்றும் எதிர்மாறாக நடந்தது ரொம்ப கவலை.

15. தன்னை விட வயதில் அதிகம் குறைந்த பச்சிளம் பாலகர்களுடன் ஊர் சுத்துவதில் இருக்கும் நுண்ணரசியல் பலருக்கு இன்னும் புரியவில்லை. 

16. நாஸ்திகராக இருந்தாலும் ஏனைவர்களின் மனதுக்காக கோயில் குளம் எல்லாம் போகும் நல்ல மனசுக்காரன். 

17. வருங்காலத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாக வேண்டும் என்பது இவரின் கனவு

18. நிறைய வாசிப்பவர் இன்றைக்கும் ஆதர்சன எழுத்தாளர் சுஜாதா தான். அண்மையில் ரசித்து வாசித்தது ஷீரோ டிகிரி.

19. ஒரு சில மேடை நாடகங்களில் நடித்தவர் விரைவில் கதாநாயகனாக ஒரு குறும்படத்தில் நடிக்கப்போகின்றார். 

20. என்னைப்போன்ற வயதில் குறைந்தவர்களுக்கு வாழ்க்கையின் பல விடயங்களை உணர்த்தியவர் இதனால் எனக்கு இவர் ஒருவகையில் குருவும் ஆகின்றார்.

21. நண்பர்கள் எதிர்பாரத நேரங்களில் அடிக்கடி அதிர்ச்சி கொடுப்பவர் சிறந்த உதாரணம் அனு ரோயல் ஹொஸ்பிட்டல் .

22.சீனியப்பு, நமீ அங்கிள் விஜயகாந்த் அங்கிள், ஆண்டி ஹீரோ, மன்மதன், தொப்பையப்பன், விக்கி இவை நண்பர்களால் அழைக்கப்படும் செல்லப்பெயர்கள்.

23.வயது முதிர்ச்சியினாலோ இல்லை வேலைப் பளுவினாலோ இப்போ அடிக்கடி கோபம் வந்தாலும் ஓரளவு பொறுமையானவர்

24. கிரிக்கெட் வர்ணனை பதிவு கட்டுரை மட்டுமல்ல சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட அத்துடன் கிரிக்கெட் தவிர கால்பந்து டெனிஸ் பார்க்கபிடிக்கும்.

25. விரைவில் லண்டன் ஒலிம்பிக்கில் இவரைக் காணலாம் (விளையாட்டு வீரனாக இல்லை ஒரு ஊடகவியளாளராக சுத்திப்பார்க்க வருகின்றார்). 

இன்று தன் பிறந்தநாளை புதியவீட்டில் கொண்டாடி மகிழும் என் நண்பன் ஹர்சுவின் தந்தை லோஷன் அங்கிள் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


பின்குறிப்பு லோஷன் 50 எனத் தலைப்பிட்டுவிட்டு வெறும் 25 விடயங்கள் தானே என நினைக்காதீர்கள் அவர் எதையும் இரண்டு மடங்காக்கிச் செய்யும் ஆற்றல் உடையவர்.




ஆறாவடு எம் மண்ணின் கதை

சிலகாலமாக இணையத்திலும் தமிழ் வாசகர்கள் மத்தியிலும் அதிகமாகப் பேசப்பட்ட புத்தகம் ஆறாவடு. நண்பர் சயந்தனின் முதல் நாவல். அண்மையில் லண்டனில் நடந்த ஆறாவடு வெளியீட்டுவிழாவின் போது சயந்தனின் கையால் இந்த நாவலை வாங்கியது மறக்கமுடியாத அனுபவம். வெளியீட்டு விழாவில் வாசிக்கத் தொடங்கி இடையில் இன்னொரு நண்பருடன் நிலக்கீழ் புகையிரத்ததில் பயணித்ததால் மீண்டும் பஸ்ஸில் வாசிப்பைத் தொடர்ந்து வீடு வருமுன்னர் வாசித்துமுடித்துவிட்டேன்.

1987ல் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் (ஜெயமோகனின் வரிகளில் சொன்னால் பாலியல் வல்லுறவே தெரியாத அல்லது செய்யாத இராணுவம்) காலத்தில் தொடங்கி 2003ல் ஜீஎல் பீரிஸும் பாலா அண்ணையும் தாய்லாந்து புக்கட் நகரில் மரக்கன்று நடும் வரை அமுதன் என்ற முன்னாள் போராளியின் கதைதான் இந்த ஆறாவடு.

இந்த நாவலானது நீர்கொழும்பில் தொடங்கி எரித்திரியாவில் முடிவடைகின்றது. 21 அத்தியாயங்கள் நீளும் இந்த நாவலில் பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறுகதையாகவும் கருதலாம். இதைப் பலர் பல இடங்களில் விமர்சித்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சயந்தன் பல கிளைக்கதைகளை ஒன்றாகச் சேர்த்து எம் வரலாற்றை நாவலாகத் தந்திருக்கின்றார்.

அமுதன் என்ற பெயருடைய ஒரு இளைஞன் தான் கதையின் நாயகன். 2002 ரணில் விக்கிரமசிங்க காலத்தில் இயக்கத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போக முனையும் இளைஞன். அவனது காதலியின் பெயர் அகிலா. இவரின் உதவியுடன் தான் அமுதன் வெளிநாட்டுக்கு நீர்கொழும்பிலிருந்து களவாக இயந்திரப் படகில் செல்லவிளைகின்றான்.;

அமுதன் என்பது அவனின் இயக்கப்பெயர். இந்த தமிழ்ப் பெயர் பம்பலை எல்லாம் சயந்தன் தனக்கே உரிய நக்கல் பாணியில் எழுதியிருக்கின்றார். சைக்கிள் கடைக்கு ஒட்டகம் எனப் பெயர் மாத்தியது எல்லாம் கதை ஓட்டத்தினூடு வருகின்றது. ஒட்டகம் எனத்தான் ஞாபகம் வருது கோப்பாயிலோ இருபாலையிலோ ஒரு சைக்கிள் கடைக்கு ப்ரியா ஒட்டகம் எனப் பெயிரிட்டுவிட்டு ஒட்டகத்தின் படமும் வரைந்திருந்தார்கள்.

தானும் தன்ரை பாடும் என இருந்த அமுதனை இந்திய இராணுவத்தினர் ஒரு தலையாட்டி தன் சொந்தப் பிரச்சனைக்காக தலையாட்டிவிட கைது செய்கின்றார்கள். பின்னர் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஈபிஆர்எல்எவ் முன்னாள் வடகிழக்கு மாகாண முதலைமைச்சர் வரதராஜப் பெருமாளின்(வரலாறு முக்கியம்) அணியினர் தம்முடன் வலுக்கட்டாயமாகச் சேர்க்கின்றார்கள்.

ஆனாலும் ஏனைய ஈபி தலைவர்களையோ தொண்டர்களையோ போலில்லாமல் அமுதன் அப்பாவியாக இருந்த படியால் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் புலிகளுடன் இணைகின்றான். அங்கே பரந்தாமன் என்ற அவனி இயற்பெயர் அமுதனாக மாறுகின்றது.

நல்ல சண்டைப்போராளியான அமுதன் ஒரு காலத்தில் ஒரு யுத்தத்தில் தன் ஒரு காலை இழக்கின்றான். இதன் பின்னர் அவன் பொய்க்காலுடன் அரசியல் பணிகளில் ஈடுபடுகின்றான். இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் அமுதன் வன்னியில் இருந்து அமுதன் அரசியல் பணிகளுக்காக யாழ்ப்பாணம் செல்கின்றான். அங்கே அகிலா மேல் காதல் கொண்டு பின்னர் அந்தக் காதலுக்காக இயக்கத்தை விட்டு விலகி ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு களவாகச் செல்லமுயல்கின்றான். அமுதன் ஐரோப்பியநாட்டுக்குச் சென்றானா? அவனது கடல்ப் பயண திகில் அனுபவங்கள் என்ன? என்பதை ஆறாவடு நாவலை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

அமுதனின் இந்தக் கதையினூடாக எம் மண்ணில் ஒரு காலத்தில் நடந்த பல நிகழ்வுகளை சயந்தன் கண்முன்னே கொண்டுவருகின்றார். சில சம்பவங்களை அழகாக பதிவு செய்த சயந்தன் சில சம்பவங்களை ஏனோ ஒரு வரியில் முடித்துக்கொண்டார் உதாரணமாக யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது பாரிய இடப்பெயர்வு நந்திக்கொடி ஏற்றப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்திய சயந்தன் அந்த அத்தியாய முடிவில் "நந்திக் கொடி ஏத்திய இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது அதற்கு ஒரு மாதம் பிந்தி செம்மணி செக்பொயிண்டில் கிருஷாந்தியின் சைக்கிளை இராணுவம் மறிந்தது." என மொட்டையாக முடிக்கின்றார்.

கிருஷாந்தி யார்? அவருக்கு என்ன நடந்தது? என்பது அடுத்த அத்தியாயத்தில் எழுதியிருப்பார் என நினைத்துப் பக்கத்தைப் புரட்டினால் ஏமாற்றம் தான் கிடைத்தது. நிச்சயமாக கிருஷாந்தியின் அவலத்தை சயந்தன் பதிவு செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் அதை ஒரு வரியில் எழுதி இருக்ககூடாது. ஈழப்பிரச்சனை நன்கு தெரிந்தவாசகர்களால் இவற்றை ஊகிக்கமுடியும் ஆனால் பிரச்சனை தெரியாதவர்கள் என்ன விடயம் இது என தலையைப் பிடுங்கவேண்டி இருக்கும்.

இந்திய இராணுவத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த வெற்றி என்ற போராளியை நான் என் வாழ்க்கையின் கண்டிருக்கின்றேன். அதேபோல இந்திய இராணுவம் இருக்கும் போது பரமசிவன் கழுத்துப் பாம்பாக இருந்த ஈபிஆர்எல்எவ் குழுவினரும் இந்திய இராணுவம் வெளியேறியபின்னர் என்னசெய்வது எனத் தெரியாமல் அமுதன் போல இயக்கத்துடன் இணைந்தவர்களும் அப்பாவி மக்களுக்குத் தொல்லை கொடுத்தது பல புலி உறுப்பினர்களின் மரணத்துக்கு காரணம் என‌ மின்கம்பத்தில் மரணத்தை தழுவியவர்கள். ஓடித்தப்பியவர்கள் எனப் பலரும் இந்தக் கதையில் உலாவும் நிஜமான பாத்திரங்களே.

சயந்தனின் நக்கல் எழுத்து நடை ஏற்கனவே இணைய வாசகர் அறிந்ததே. அதை நடையுடன் இந்த நாவலையும் எழுதியிருப்பதால் பல இடங்களில் வாய்விட்டே சிரித்தேன். பஸ்சில் பக்கத்தில் இருந்த ஜமேக்கன் பெண் அடிக்கடி நான் சிரிப்பதைப் பார்த்து இன்னொரு இருக்கையில் போய் அமர்ந்த கொடுமையும் சயந்தனால் எனக்கு ஏற்பட்டது.

டில்ஷான் தேநீர்ச் சாலைப் சும்மா தேநீர்ச் சாலையாக மாறிய‌ பகிடி உங்கடை எங்கடை நம்பர் பிளேட் பகிடி, இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிய கூத்து எனப் பல இடங்களில் சயந்தன் சிரிக்க வைப்பதுடன் இவை எல்லாம் ஒரு காலத்தில் நடந்தவையே என மீண்டும் நினைக்கவும் வைக்கின்றார்.

அந்தக் காலத்தில் அந்த மரணம் மலிந்த மண்ணில் வாழ்ந்த ஜீவராசிகளில் நானும் ஒருவன் என்பதால் கதையின் ஓட்டத்துடன் மிக இலகுவாக கலப்பதுடன் பல சம்பவங்கள் எங்கள் ஊரில் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்களுடன் ஒத்துப்ப்போவதாகவும் உள்ளது. இதுதான் சயந்தனுக்கு கிடைத்த வெற்றி.

பின்குறிப்பு : இது ஒரு விமர்சனம் அல்ல நுனிப்புல் மேய்ச்சலே